பாக்டீரியா - நல்லதா? கெட்டதா??
கும்பகோணம் காவிரிக் கரையின் ஓரத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன். அறிவியல் மீது கொண்ட ஆர்வம் அவனை எப்போதும் புதுமையான கேள்விகளை எழுப்பச் செய்யும். ஒருநாள், பள்ளியில் உயிரியல் ஆசிரியர் பாக்டீரியாக்கள் பற்றியும், அது எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார். இதைக் கேட்டதும், அம்மாணவனுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன.அன்று மாலை வீட்டில் நுழையும் போது, மிகுந்த பசியுடன் இருந்ததால் அவன் அவசரம், அவசரமாக சமையலறைக்குள் செல்ல முயல்கிறான். பாட்டி அவனை முதலில் கை, கால்களை நன்றாகக் கழுவிக் கொண்டு வருமாறு கட்டளையிடுகிறார். வெளியில் சென்று, வீட்டிற்குள் வரும் போது, உடலின் பல பகுதிகளில் பலதரப்பட்ட நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் உட்பட, ஒட்டிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால், ஆடை மூடாத பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம் என்பதையும் நினைவூட்டுகிறார். மேலும் சமையலறையில் பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன என்றும் சொல்கிறார். அச்சமயம், அவனது பாட்டி தயிர் தயார் செய்து கொண்டிருந்தார். "பாலை கொதிக்க வைத்து குளிரவிட்ட பிறகு ஒரு சிறிய ஸ்பூனில் தயிரை சேர்த்து, ஒரு மூன்று, நான்கு மணி நேரம் வைத்தால், அது தயிராக மாறுகிறது என்று கூறுகிறார். 'அது எப்படி' என்று அவன் கேட்கையில், அவர் புன்னகையுடன், "Lactobacillus என்ற பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. இதனால் பால் உறைந்து தயிராகிறது" என்று விளக்குகிறார்.அன்று இரவு, அவனின் அம்மா, இட்லி செய்வதற்காக ஊற வைத்திருந்த உளுத்தம் பருப்பையும், அரிசியையும் அரைத்து, மாவைப் புளிக்க வைப்பதற்காக ஒரு அகன்ற பாத்திரத்தில் நன்கு மூடி வைக்கிறார். இவன் உடனே, "இட்லி மாவு எப்படி புளிக்கிறது?" என்ற கேள்வி தொடுக்க, "மாவில் உள்ள Leuconostoc மற்றும் Lactobacillus போன்ற பாக்டீரியாக்கள் கார்பன் டையாக்சைடைக் காற்றாக வெளியிடுகின்றன. இதனால், மாவு நுரை ததும்புவது போல், பொங்கி, அதன் அளவு இரண்டு, மூன்று மடங்காக பெருகி, மறுநாள் காலையில் இட்லி வார்க்கும் போது, மல்லிப்பூ மாதிரியான மென்மையான இட்லியாக இருக்கும்," என்று அம்மா விளக்குகிறார்.இவ்விளக்கங்களைக் கேட்ட மாணவனின் ஆர்வம் மேலும் மெதுவாக எல்லா துறைகளுக்கும் செல்ல தொடங்குகிறது. ஒருநாள், அவன் தனது நண்பனுடன் ஒரு இறைச்சிக் கடைக்கு செல்கிறான். அங்கே சில இறைச்சிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. "மாமா, இவை ரசாயனங்களால் பாதுகாக்கப்படுகிறதா?" என்று வினவுகிறான். கடைக்காரர் சிரித்துக் கொண்டே சொல்கிறார், "Lactobacillus sakei என்ற நல்ல பாக்டீரியாக்கள் தான் இறைச்சியை பாதுகாக்கின்றன."சில நாட்களுக்குப் பிறகு, இவனின் தந்தைக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவ மனைக்குச் செல்கிறார். மருத்துவர் அவரின் சிறுநீரை மைக்ரோஸ்கோப்பின் மூலம் சோதித்து, அதில் அதிகமான ஸ்ட்ரூவைட் (struvite, அம்மோனியம் மெக்னீஷியம் பாஸ்பேட்) படிகங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். "Proteus mirabilis போன்ற சில பாக்டீரியாக்கள், யூரியேஸ் என்சைம் மூலம் அம்மோனியாவை உற்பத்தி செய்வதால் இந்த படிகங்கள் உருவாகின்றன," என்று மருத்துவர் விளக்குகிறார்.இதைக் கேட்கும் போது, இம்மாணவனின் அறிவியல் ஆர்வம் அவனை மெய்மறக்கச் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையில்தான் எத்தனை பாக்டீரியாக்கள், மறைந்த நாயகர்களாக தோன்றி, செயல்பட்டு, பிறகு மறைக்கின்றனர். கண்களால் பார்க்க முடியவில்லை யென்றாலும், மேலும் அவர்களின் வேலைகள் எளிமையாகத் தோன்றினாலும், அவற்றின் தாக்கம் எவ்வளவு மிகப்பெரியது! அவன் கற்பனை உலகத்தில் பறந்தபடி, "நாம் காணாத இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது!" என்று ஆச்சர்யம் படுவதுடன், மேலும் அறிவதற்கு ஆர்வம் கொள்கிறான். கல்லூரி சென்று "நுண்ணுயிரியல்" பயிலவேண்டும் என்ற லட்சியம் அவனிடம் உருவாகிறது.இதை எழுதும் போது, எப்போதோ, சுஜாதா எழுதிய 'அம்மோனியம் பாஸ்பேட்' என்ற சிறு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கொடிய கிருமியைக் கொல்வதற்கு, நடராஜன் என்ற ஒரு சிறிய பாக்டீரியா, மிகவும் வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட பகுதிக்குச் சென்று கொல்வதைப் போல்! இவர் 'தயிரிலிருந்து தொழில்நுட்பத்திற்குப் போகும் பயணத்தில் பாக்டீரியாக்கள் எங்கும் இருக்கின்றன," என்ற தலைப்பில் எழுதியிருப்பாரோ!